ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 5 கோடி ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஒரு கோடி ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என்பது நீதிமன்றம் உத்தரவு.
இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றிருந்த நிலையில், உத்தரவுக்கு அமைய குறித்த நபர்கள் நட்டஈட்டை எவ்வாறு வழங்குவார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.
நட்டஈட்டை செலுத்தாதிருக்க சிறிசேன முயற்சி - கொழும்பு பேராயர் இல்லம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், நட்டஈடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாயை செலுத்தாதிருப்பதற்கு முயற்சித்து வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவிக்கின்றது.
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை இல்லாது செய்வதற்கு, நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்த அவர் தயாராகி வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
'7 நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக, இந்த நாட்டை போலியாக ஆட்சி செய்ய முடியாது என்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சில விடயங்களை அறிந்துக்கொள்ள முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அந்த தண்டனையை இல்லாது செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
அவ்வாறான விடயங்களை செய்ய முடியாது. அந்த தீர்ப்பை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். தண்டனைக்கு மைத்திரிபால சிறிசேனவை கீழ்படிய வைக்க வேண்டும்" என அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவிக்கின்றார்
மைத்திரிபால சிறிசேன பதில்
நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் தடவையாக நேற்றைய தினம் பொது வெளியில் கருத்து தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் பணத்தை செலுத்தும் பின்புலம் தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிக்னறார். எனினும், நீதிமன்ற தீர்ப்பை தான் மதித்து, தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேகரித்து, இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்த தயாராகி வருவதாக அவர் கூறுகின்றார்.
''நான் சட்டத்தை மதிக்கின்றேன். இந்த சம்பவம் நேரும் தருணத்தில், நான் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்த போதிலும், தனக்கு இது தொடர்பில் எந்தவொரு நபரும் அறிவிக்கவில்லை என நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். இந்த தீர்ப்பில் 85 பக்கங்களுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது.
இந்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்த போதிலும், ஜனாதிபதி எந்தவொரு விதத்திலும் இது குறித்து அறிந்திருக்கவில்லை என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், 10 கோடி ரூபாயை செலுத்த ஏன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என நீங்கள் சிந்திக்க முடியும்?. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகள், ஏதேனும் ஒரு தவறிழைக்கும் பட்சத்தில், அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்கு எந்தவொரு வகையிலும் பொருளாதார பின்புலத்தை நான் கொண்டிருக்கவில்லை. எமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேர்ப்போம் என நானும், எனக்கு நெருங்கியவர்களும் தீர்மானித்துள்ளோம்.
எனக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. நான் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலத்திலும், எனது சொத்து விபரங்களை நாடாளுமன்றத்திடம் வெளிப்படுத்தியுள்ளேன். தேவை ஏற்படுமாயின், தகவலறியும் சட்டத்தின் ஊடாக அதனை பெற்றுக்கொண்டு, பார்வையிட முடியும்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

