கடன் நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தானை கரை சேர்க்குமா சௌதி?

புத்தாண்டின் துவக்கம் பாகிஸ்தானுக்கு அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை. பாகிஸ்தான் தனது சொந்தக் காலில் நிற்காமல், செளதி அரேபியாவின் கடனை சார்ந்தே இருந்து வருகிறது. 2023ம் ஆண்டும் இதே போலவே தொடங்கியது.

செளதி அரேபியா மீண்டும் பாகிஸ்தானை கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கப் போகிறது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரம் ஐந்து பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது. இது ஒரு மாதத்திற்கான இறக்குமதிச்செலவை பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானது.



இது தவிர பாகிஸ்தானுக்கு திருப்பிச் செலுத்தவேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் உள்ளது. உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், திவாலாகும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம்தான் பாகிஸ்தான் நிதிஅமைச்சர் இஷாக் தார், திவாலாவதற்கான  வாய்ப்பை நிராகரித்தார். செளதி அரேபியா விரைவில் புதிய கடன் வழங்கப் போகிறது என்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் ஆசிம் முனீர், செளதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெனரல் முனீர் கடந்த வாரம் செளதி அரேபியா சென்றார். திங்கட்கிழமை அவர் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.

செளதியின் முக்கிய அறிவிப்பு

இந்த சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தானில் முதலீட்டை 10 பில்லியன் டாலர் வரை அதிகரிப்பதை ஆய்வு செய்யுமாறு  செளதி பட்டத்து இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர, பாகிஸ்தானின் மத்திய வங்கியில் உள்ள டெபாசிட்களை ஐந்து பில்லியன் டாலர்கள் வரை அதிகரிப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளுமாறு செளதி மேம்பாட்டு நிதியத்தை அதாவது SDF ஐ அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. மறுபுறம், பாகிஸ்தானுக்கு வழங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை செளதி கடந்த டிசம்பர் மாதம் நீட்டித்தது.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பொருளாதாரத்திற்கு உதவ பட்டத்து இளவரசர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று செளதி அரசு செய்தி முகமையான SPA தெரிவிக்கிறது.   பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறுகிறது.

பாகிஸ்தானை கைதூக்கி விடுவதற்கு செளதி அரேபியா முன்வருவது இது முதல் முறையல்ல. செளதி அரேபியா கடந்த காலங்களில் இதை பலமுறை செய்துள்ளது.

எண்ணெய்க்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி உதவியை இரட்டிப்பாக்குவதாக கடந்த ஆண்டு, செளதி அரேபியா அறிவித்தது. இது தவிர 4.2 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தும் தேதியும் நீட்டிக்கப்பட்டது. முந்தைய கடன் ஒப்பந்தத்தின் கீழ் 2021 டிசம்பரில் செளதி அரேபியா  பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் மூன்று பில்லியன் டாலர்களை டெபாசிட் செய்தது.

2021 அக்டோபரில் செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு, 4.2 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்தது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செளதி சுற்றுப்பயணத்தின் போது இந்த உதவி அறிவிக்கப்பட்டது. இந்த உதவி குறைவான வட்டியுடன் கூடிய கடன் மற்றும் எண்ணெய் கடன் வடிவில் இருந்தது.

அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்து, “பாகிஸ்தான் மத்திய வங்கிக்கு மூன்று பில்லியன் டாலர்களும், எண்ணெய்க்காக 1.2 பில்லியன் டாலர்களும் வழங்கிய பட்டத்து இளவரசருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். செளதி அரேபியா ஒவ்வொரு கடினமான நேரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற ஷாபாஸ் ஷெரீப், அதன் பிறகு இரண்டு முறை செளதி அரேபியா சென்றுள்ளார்.

ஜெனரல் முனீர் நவம்பர் மாதத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார். பதவியேற்ற ஒன்றரை மாதங்களுக்குள் அவர் செளதி அரேபியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.

பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைமையை விட அங்குள்ள ராணுவத்தின் பேச்சை செளதி அரேபியா அதிகம் கேட்பதாக கூறப்படுகிறது. ஜெனரல் முனீர் அங்கு சென்ற பிறகு வெளியான பட்டத்து இளவரசரின் இந்த அறிவிப்பு இந்தக்கூற்றுக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

2018 இல் பிரதமரான பிறகு இம்ரான் கான் செளதி அரேபியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். அப்போதும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி தேவைப்பட்டது.

பாகிஸ்தான், ​​செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவை அதிக அளவில் சார்ந்திருப்பது வெட்கக்கேடானது என்று இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), 2014 செப்டம்பர் 20 ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து இம்ரான் கானின் அறிக்கையை ட்வீட் செய்தது.

“நாம் உதவிக்காக செளதிக்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகவும் வெட்கக்கேடானது” என்று இந்த ட்வீட்டில் இம்ரான் கான் கூறியிருந்தார்.

பாகிஸ்தானை ஒவ்வொரு முறையும் செளதி அரேபியா காப்பாற்றுவது ஏன்?

அரபு நாடுகளில் மேலாதிக்கம் செய்வதற்காக சன்னி ஆதிக்க நாடான செளதி அரேபியாவுக்கும், ஷியா ஆதிக்கம் செலுத்தும் இரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இரானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே விரோதம் நிலவுகிறது. இரு நாடுகளும் ஏமனில் மறைமுகப் போரிலும் ஈடுபட்டுள்ளன.

தேவைப்பட்டால் பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ ஒத்துழைப்பையும் செளதி அரேபியா எதிர்பார்க்கிறது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இஸ்லாமிய உலகில் உள்ள ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தான்.

தேவைப்பட்டால் பாகிஸ்தான், செளதி அரேபியாவுக்கு அணு ஆயுதங்களை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. செளதி அரேபியா மற்றும் அரச குடும்பத்தின் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

செளதி அரேபியாவின் இறையாண்மையை பாதுகாக்க தனது நாடு எந்த வகையிலும் அதற்கு ஆதரவாக நிற்கும் என்று 2019 அக்டோபரில் செளதி அரேபியாவிற்கான தனது பயணத்தின் போது அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

உலக நாடுகளின் அணுகுமுறை எதுவாக இருந்தாலும், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் நிற்கும் என இம்ரான் கான் தெரிவித்தார். செளதி அரேபியாவின் ராணுவத்துக்கும் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. செளதி அரேபியாவில் 65 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறி பிரான்சில் வசிக்கும் விருது வென்ற பத்திரிகையாளர் தாஹா சித்திக்கி எழுதிய ஒரு கட்டுரை 2019 பிப்ரவரி 16 ஆம் தேதி அல்-ஜசீராவில் வெளியானது. பொருளாதார உதவிகள் மற்றும் முதலீடுகளின் வாக்குறுதிகள் மூலம் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் அரசின் விசுவாசத்தைப் பெற செளதி அரேபியா முயற்சிக்கிறது. தனக்கு ஏற்புடைய விதத்தில் பாகிஸ்தானின் கொள்கைகளை உருவாக்குகிறது,” என்று அதில் அவர் எழுதியுள்ளார்.

"செளதி கடன் கொடுப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய விஷயம் அல்ல. செளதியின் பணம் மற்றும் அமெரிக்க கொள்கையின் காரணமாக இஸ்லாமாபாத் எப்போதும் ரியாத்துடன் நெருக்கமாக உள்ளது. 1977 இல் ஜியா-உல்-ஹக் இடதுசாரி சார்பு கொண்ட சுல்ஃபிகர் அலி புட்டோவை ஆட்சியில் இருந்து அகற்றியபோது இந்த உறவு முன்னுக்கு வந்தது. அமெரிக்காவை நெருங்குவதற்காகவும் இது செய்யப்பட்டது,” என்று தாஹா சித்திக்கி குறிப்பிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.