கிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. 2002 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்பட்டது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடு அக்கராயன், புதுமுறிப்பு, வன்னேரி, பிரமந்தனாறு, கல்மடு, புதுஐயன், கரியாலை நாகபடுவான், கனகாம்பிகை ஆகிய குளங்களில் இருந்து பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் மண்வள ஆராய்ச்சி நிலையம் இரணைமடுச்சந்தியிலும் அமைந்துள்ளன. பல்கலைக்கழக விவசாய பீடமும் பொறியியற் பீடங்களும் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியத் தலைமையகமும் அறிவியல் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்றன. வட்டக்கச்சியில் இயங்கிய விவசாயப் பயிற்சிக் கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விதை நெல் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிலையம் கரடிப்போக்கில் இயங்குகின்றது.
கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் இருந்தனர்.
இதனை தமிழ் விக்கிபீடியா இணையத்தில் இருந்து எடுத்து உங்களுக்காக சமர்பித்துள்ளேன்.

